ஆர்.கே.நகரில் போட்டியிடுவதால் மீண்டும் மீண்டும் மிரட்டல்: தீபா பரபரப்பு பேச்சு - 5 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதால் மீண்டும் மீண்டும் மிரட்டல்: தீபா பரபரப்பு பேச்சு - 5 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி
சென்னை- புதிய பேரவை துவக்கியுள்ள ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதையொட்டி ஆர்.கே.நகர் தொகுதி வண்ணாரப்பேட்டையில் தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு மாலை 3 மணிக்கு வருவதாக தீபா தெரிவித்திருந்தார். ஆனால், இரவு 7 மணிக்கு பிறகும் தீபா வரவில்லை. இதனால், அங்கிருந்த ஆதரவாளர்கள் எரிச்சல் அடைந்தனர். ஏற்கனவே பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுத்திய தீபா மீது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், முதல் கூட்டத்திற்கே இவ்வளவு தாமதமா? என கொந்தளித்திருந்தனர்.
கடைசியில் ஒருவழியாக இரவு 8 மணி அளவில் தீபா வந்து சேர்ந்தார்.
அப்போது அவர் அருகில் செல்ல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களே திணறிக் கொண்டிருந்த நிலையில், அவர்களிடம் தீபாவின் பாதுகாவலர்களும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் மேடைக்கு சென்ற தீபா பேசியதாவது: இந்த தொகுதியில் ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தாரோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன். எனக்கு மீண்டும் மீண்டும் மிரட்டல்கள் வருகின்றன. அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுவது உறுதி. அதை யாராலும் மாற்ற முடியாது. மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து தனக்கு மிரட்டல் வருகிறது என்று மட்டுமே தீபா கூறுவது அவர் ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு பேச வேண்டியதை இப்போதும் பேசி வருகிறார் என தீபா ஆதரவாளர்கள் புலம்பினர்.
0 comments:
Post a Comment