சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் - நோயாளிகள் கடும் அவதி: அரசு அலட்சியம்
சென்னை அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் - நோயாளிகள் கடும் அவதி: அரசு அலட்சியம்
சென்னை- தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் இன்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் என்பவரை பார்ப்பதற்காக திருநெல்வேலியில் இருந்து வந்த அவரது உறவினர்கள் நேற்று அங்கு சென்றனர். விஜய், சிகிச்சை பெற்று வரும் வார்டு எண் 30(எஸ்) பகுதிக்குள் உறவினர்கள் மொத்தமாக சென்றதை அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கண்டித்துள்ளனர். ''நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கும் பிரிவுக்குள் இப்படி கூட்டமாக வந்தால், நாங்கள் எப்படி பணியாற்ற முடியும்?'' எனறு கேட்டு சத்தம் போட்டுள்ளனர்.
இதனால், டாக்டர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பெண் பயிற்சி டாக்டர் வினோதாவை விஜய் உறவினர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் காட்டுத்தீ போல் மருத்துவமனை முழுவதும் பரவியது. இதை கேள்விப்பட்ட பயிற்சி டாக்டர்கள் கொதிப்படைந்தனர். அவர்கள் திரண்டு வந்து விஜய்யின் உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மருத்துவமனை எதிரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர்கள் பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு பொது மருத்துவமனையில் அவசர சிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாதவரத்தை சேர்ந்த ஜெனி(67) தலையில் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த, திருமுல்லைவாயலை சேர்ந்த ஜோசப், செய்யாறு கோவிந்தம்மாள் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகர் ஆகியோருக்கு பாதிப்பு அதிகமாகி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இதைக்கண்டித்து உயிரிழந்த உறவினர்கள் டாக்டர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பெண் டாக்டரை தாக்கிய நோயாளி விஜயின் உறவினர்கள் திலிப்குமார், பாலகிருஷ்ணன், லதா, நிஷா, பிரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த நிலையில், இன்று காலையில் பயிற்சி டாக்டர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி கோஷமிட்டனர். காலை 8 மணி வரை பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தி அமர்ந்திருந்தனர். இந்த போராட்டத்தால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, நான்கு பேர் பலியானதற்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்க முன்வராததுதான் என குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டாக்டர்களின் ஸ்டிரைக்கால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பணியில் இருக்கும் டாக்டர்கள் பெரும்பாலும் வார்டுக்கு வருவதில்லை. பயிற்சி பெற்று வரும் டாக்டர்கள்தான் சிகிச்சையை கவனித்து வருகின்றனர். அவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இந்த பிர்ச்னையை அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது: டாக்டர்கள் தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அப்போது அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி விடுகின்றனர். இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பணியின்போது மருத்துவர்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை தோல்வி: அரசு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் நாராயணசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் இருபது நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் பயிற்சி டாக்டர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் அனைத்து டாக்டர்களின் நோக்கம். தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு கூட இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் நலன்கருதி பயிற்சி டாக்டர்கள், போலீசார், பத்ரிகையாளர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக செயல்பட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தவறான கருத்துக்களை பரப்ப கூடாது. பயிற்சி டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரவும் போராட்டம்: சென்னை மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனால், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில். சென்னை அரசு பொதுமருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் போராட்டம் பரவத் தொடங்கி உள்ளது. எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையிலும் இன்று காலை பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் கோவை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகினற்னர். மற்ற மருத்துவமனைகளிலும் போராட்டம் பரவும் முன்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.
0 comments:
Post a Comment