மடகாஸ்கரில் வீசிய புயலுக்கு 50 பேர் பலி
மடகாஸ்கரில் வீசிய புயலுக்கு 50 பேர் பலி
மடகாஸ்கரில் வீசிய கடும் புயலுக்கு 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளதாவது: மடகாஸ்கரில் கடந்த வாரம் தொடர்ந்து வீசிய கடும் புயலுக்கு 50 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மடகாஸ்கரின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை இந்தப் புயல் புரட்டிப் போட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 1.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரங்களை இழந்து நிர்கதியாகி உள்ளனர். தலைநகர் ஆன்டனநரிவோவில் மட்டும் இந்தப் புயலால் 32,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். புயலால் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு அரசு சார்பில் 137 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டைத் தாக்கும் மிக மோசமான புயல் இதுவாகும். புயல் காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது. 2012-இல் வீசிய இரண்டு புயலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2015-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மடகாஸ்கர் உணவு பற்றாக்குறையால் தவித்து வருகிறது. குறிப்பாக, அந்தத் தீவின் தெற்குப் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment