அரிசி முறுக்கு, சீடை அட்டை பெட்டிக்குள் வைத்து கடத்த முயன்ற ரூ.55 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் 3 பேர் பிடிபட்டனர்
அரிசி முறுக்கு, சீடை அட்டை பெட்டிக்குள் வைத்து கடத்த முயன்ற ரூ.55 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் 3 பேர் பிடிபட்டனர்
சென்னை: சென்னையில் இருந்து பெரிய அளவில் ஹவாலா பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு முதல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த அப்துல் சலாம் (29), அப்துல் ரசாக் (40) ஆகியோர் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூர் செல்ல வந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களது பாஸ்போர்ட்டை பார்த்தபோது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.
அவர்கள், கையில் ஒரு அட்டை பெட்டி வைத்திருந்தனர். அதில், என்ன இருக்கிறது என்று அதிகாரிகள் கேட்டபோது, அரிசி முறுக்கு, சீடை என்று கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர். முருக்கு, சீடை பார்சலுக்கு நடுவில் கருப்பு பாலித்தீன் கவர் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி இருந்தது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதேபோன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். ராமநாதபுரத்ைத சேர்ந்த கான் (36), சுற்றுலா பயணிகள் விசாவில், இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தார். சந்தேகத்தில் அவரது சூட்கேஸ், பையை சோதனை செய்தனர். எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர், யூரோ கரன்சி இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் ஆகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து கானை கைது செய்தனர். விசாரணையில், 3 பேரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், ஒரே விமானத்தில் சென்றால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை தவிர்ப்பதற்காகவே தனித்தனி விமானத்தில் செல்ல இருந்தனர் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பியவர்கள் யார் என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment