Advertisements

Friday, 17 March 2017

பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது: ஆர்.கே.நகர் தேர்தலில் 6 முனை போட்டி - மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் பிரசாரம் தொடங்குகின்றனர்


பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது: ஆர்.கே.நகர் தேர்தலில் 6 முனை போட்டி - மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் பிரசாரம் தொடங்குகின்றனர்

சென்னை- ஆர்.கே.நகர் தொகுதியில் ஆறு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியானது. இப்போதே அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்களும் விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவர் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் வக்கீல் மருதுகணேஷ், அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.
தினகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் ஒரு பிரிவினரின் ஆதரவு பெற்ற தீபாவும் தனியாக போட்டியிடுகிறார். பாஜ சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேமுதிக வேட்பாளர் மதிவாணன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ததோடு பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது புறக்கணிப்பதா? என்பதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வைகோ தனது முடிவை வருகிற 18ம் தேதி அறிவிக்கிறார். பாமக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. தமாகா இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கா விட்டாலும் அவர்கள் போட்டியிடப் போவதில்லை. இந்த சூழ்நிலையில், திமுக, அதிமுகவின் 3 அணிகள், தேமுதிக, பாஜ என்று ஆறு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தேமுதிக வேட்பாளர் மதிவாணன் உள்ளிட்ட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வருகிற 22ம் தேதியும், மதுசூதனன் வருகிற 22ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சசிகலா அணி டி.டி.வி. தினகரன் வருகிற 23ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக, அதிமுக ஓ.பி.எஸ்., சசிகலா, தீபா அணியினர் தொகுதியை முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட உடனே தனது பிரசாரத்தை தொடங்கினார். தற்போது அவர் வீடு, வீடு விடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். ஓ.பி.எஸ். அணியினர் வார்டு வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவினரில் பெரும்பாலானோர் ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். அவர்கள் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதிமுக சசிகலா அணியினர் இன்னும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பிரசாரம் தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
தீபா நேற்று ஆர்.கே.நகரில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். வார்டு வாரியாக பொறுப்பாளர்களை போட்ட பின்பு அவர் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். திமுக வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவர் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பொதுக்கூட்டம் வாயிலாகவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

மதுசூதனனை ஆதரித்து ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் பாஜ வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் பிரசார களத்தில் குதிக்க உள்ளனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். வேட்பாளர்கள், தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 23ம் தேதி கடைசி நாள். அதன் பின்னர், 24ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 27ம் தேதி வேட்மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates