Advertisements

Wednesday, 8 March 2017

ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள்





சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான "ஸ்மார்ட் டிவி'க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும்; அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்பானது, என்க்ரிப்ட் செய்யப்பட்டது என நினைத்து பயன்படுத்தும் மெசேஜிங் அப்ளிகேஷன்களைக் கூட ஹேக் செய்ய முடியும். உதாரணமாக வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை உளவு பார்க்கும் டூல் பற்றி விக்கிலீக்ஸ் கூறும்போது, "இந்த டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை பேக் ஆப் என்னும் மோடில் வைக்க முடியும். அதாவது பயனாளர் டிவியை அணைத்தாலும், டிவி அணையாமல் இருக்கும். அப்போது டிவி பக் ஆக செயல்பட்டு, டிவி இருக்கும் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். பின்னர் அதனை இணையம் மூலம் சி.ஐ.ஏ சர்வருக்கு அனுப்பும்" என்கிறது.

அதேபோல சி.ஐ.ஏ.,வால் ட்ரக் மற்றும் கார்களில் இருக்கும் வாகன  கண்ட்ரோல் சிஸ்டமையும் உளவு பார்க்க முடியுமாம். "இதன் மூலம் வாகன விபத்துக்களை கூட அவர்களால் உருவாக்க முடியும்" என சி.ஐ.ஏ குறித்து குற்றம் சாட்டுகிறது விக்கிலீக்ஸ். அதேபோல சி.ஐ.ஏ.,வில் இருக்கும் மொபைல் டிவைஸ் பிரான்ச் ஆனது ஐபோன்களை கன்ட்ரோல் செய்யும் அல்லது தகவல்களை திருடும் மால்வேர்களையும் உருவாக்கியுள்ளதாக கூறுகிறது. 

தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பவை தனிநபர்களின் முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. எனவே அவற்றின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால் சி.ஐ.ஏ இதனை செய்கிறது. அதேபோல ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்வதன் மூலமாக, அந்த போன்களில் இருக்கும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆப்ஸ்களை உளவு பார்ப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. இதில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்றவை கூட விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுவதால் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "நாங்கள் பார்த்தவரையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பெரும்பாலான குறைபாடுகள் ஏற்கெனவே எங்கள் சமீபத்திய அப்டேட்டில் சரி செய்யப்பட்டு விட்டன. எங்கள் பயனாளர்களை எப்போதும் லேட்டஸ்ட் அப்டேட்டான ஆபரேட்டிங் சிஸ்டமைத்தான் பயன்படுத்த சொல்லிக் கூறி வருகிறோம்" எனக் கூறியுள்ளார். 

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தனை ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் சி.ஐ.ஏ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு நோட் 7 போன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி வடிவில் மீண்டும் பிரச்னை வந்துள்ளது.     


இந்தநிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து எட்வர்ட் ஸ்னோடென், "அமெரிக்காவில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை கண்காணிக்கும் வகையில் வேண்டுமென்றே, அமெரிக்க மென்பொருட்களில் பாதிப்புகளையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்யாவிட்டால், எந்த ஹேக்கரும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அமெரிக்க உளவு அமைப்பிற்கும், FBI-க்கும் இதுபற்றி தெரிந்திருந்தாலும் கூட, உளவு பார்ப்பதற்காக இவற்றை சரிசெய்யவில்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates