நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது குறித்து பரிசீலிப்பதாக நட்டா உறுதி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது குறித்து பரிசீலிப்பதாக நட்டா உறுதி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளதாக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். நட்டாவை சந்தித்த பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை எடுத்து கூறியதாக குறிப்பிட்டார். மாணவர் சேர்க்கை தேதி நெருங்கி வருவதால் விரைந்து முடிவெடுக்க மத்திய அமைச்சர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார். மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் விஷயத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் 3 லட்சம் மாணவர்கள் உயிரியல் படித்து வருகின்றனர். ஆனால் CBSE பாடத்திட்டத்தின் கீழ், 3,000 மாணவர்கள் தான் படிக்கின்றனர். இரண்டு பாட திட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கருத்தில் கொண்டு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும் என நட்டா உறுதி கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து பேசிய தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், நீட் தேர்வால் தமிழகத்தின் சமூக நீதி கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மத்திய சுகாதார அமைச்சர் நட்டாவிடம் விளக்கியதாக தெரிவித்தார். முன்னதாக தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினர். அதன் பின் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அமைச்சர் பரிசீலிப்பதாக ஜவடேகர் கூறியதாக குறிப்பிட்டார். மேலும் அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.12-ம் வகுப்பு தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால் ஏற்கனவே இருக்கும் படிப்பு சுமையோடு ‘நீட்\' தேர்வு குழப்பமும் மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. எனவே, நீட் குறித்து விரைந்து முடிவெடுக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
good new
ReplyDelete