சேலத்தில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.25கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு: பெண் உள்பட 5 பேர் கைது
சேலத்தில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.25கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு: பெண் உள்பட 5 பேர் கைது
தாரமங்கலம் : சேலத்தில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.25 கோடி மதிப்பிலான மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கி பிடித்து மீட்டனர். இதில் ஈடுபட்ட பெண் உள்பட 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தனர்.
அதன்படி, கடத்தல்காரர்களிடம் வியாபாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்ட அதிகாரிகள், மரகதலிங்கத்தை ரூ.15 கோடிக்கு விலை பேசினர். ஆனால் கடத்தல் ஆசாமிகள் ரூ.25 கோடி வேண்டும் என பிடிவாதமாக இருந்தனர்.
நேற்று ரூ.20 கோடிக்கு விலை பேசி மரகதலிங்கத்தை கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வந்துவிடும்படி நிபந்தனை விதிக்கப்பட்டது. மரகதலிங்கத்தை பெற்றுக்கொண்டதும் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஐஜி பொன்.மாணிக்கவேல், டிஎஸ்.பி.பொன்.கார்த்திகேயன் ஆகியோர் சேலம் வந்தனர். மாவட்ட போலீசார் ஒத்துழைப்புடன் அக்கும்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். நேற்று பகல் 2மணி அளவில் தாரமங்கலம் அருகில் அழகுசமுத்திரம் என்ற இடத்தில் இனோவா காரில் வந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து, அதில் இருந்த 5 பேரை கைது செய்தனர். இக்கும்பலுக்கு சேலம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த வள்ளி என்ற மேரி(49) தலைவராக இருந்துள்ளார். மற்றவர்கள் இவரது கூட்டாளிகளான சீனிவாசன்(35), மாரியப்பன்(47), சரவணன்(27), வைகுந்தத்தை சேர்ந்த குமரேசன்(28). மேரியிடம் இருந்து 7 கிலோ மரகதலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிபட்ட 5 பேரும் தாரமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சிலை எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறுகையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இதுவரை பிடிபட்டதிலேயே அதிக விலை, அதிக எடை கொண்ட மரகதலிங்கம் இதுதான். இந்த மரகதலிங்கத்தை திருவாரூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிடிபட்டவர்கள் வெறும் அம்புதான். இவர்களுக்கு பின்னால் பெரிய கும்பல் இருக்கிறது. அந்த கும்பலை கூண்டோடு பிடிப்போம் என்றார்.
0 comments:
Post a Comment